Wednesday, August 24, 2016

வரலாற்று சிறப்புமிக்க கொற்றிகோடு பெயரில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட வேண்டும்

குமரி மாவட்டம் கல்குளம் தாலுகா கோதநல்லூர் கிராமம் சமீபத்தில் இரண்டாக பிரிக்க பட்டு கோதநல்லூர் கிராமம் என்றும் குமாரபுரம் கிராமம் என்றும் செயல்பட்டு வருகிறது.

குமாரபுரம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு தனியாக அலுவலகம் கட்டபட்டு திறக்க பட்டுள்ளது  இந்நிலையில் இப்பகுதி மக்கள் சார்பாக குமாரபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தின் பெயரை வரலாற்று சிறப்புமிக்க கொற்றிகோடு பெயரில் அமைக்க வேண்டும் என்பது.  

ஏற்கனவே கொற்றிகோடு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.  கொற்றிகோடு என்பது குமரி கண்டத்தின் ஒரு பகுதியான குமரி கோடு என்பதை குறிப்பிடும் இடமாகும்.  கொற்றிகோடு எல்லையானது பெருஞ்சிலம்பு முதல் முட்டைகாடு வரை பரந்த இடமாகும்.  குமாரபுரம் என்பது சந்திப்பின் பெயர் தானே தவிர ஊரையோ வரலாற்றையோ குறிக்கும் பெயர் அல்ல.

கிராம நிர்வாக அலுவலகம் மட்டுமல்லாது பேரூராட்சி அலுவலகத்தின் பெயரையும் கொற்றிகோடு என மாற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்..  
Tuesday, September 16, 2014

கொற்றிகோட்டில் மாவட்ட அளவிலான கிளியாந்தட்டு போட்டி

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஓன்று கிளியாந்தட்டு. இந்த விளையாட்டு கிராம புறங்களில் இளைஞர்கள் விளையாடி வருகிறார்கள். கிராம புறங்களில் விளையாடிய விளையாட்டானது இன்று சர்வதேச அளவில் விளையாட பட்டு வருகிறது. இந்திய அளவில் இந்த விளையாட்டு அட்யா பட்யா என்ற பெயரில் விளையாட பட்டு வருகிறது. இந்திய அரசு இந்த விளையாட்டை விளையாட்டு வரிசையில் சேர்த்து அங்கீகரித்துள்ளது. 
விளையாட்டு போட்டியை துவங்கி வைத்த போது

இந்நிலையில் 13-09-2014 அன்று குமரி மாவட்ட அளவிலான கிளியாந்தட்டு போட்டி கொற்றிகொட்டில் வைத்து நடத்தப்பட்டது. இந்த போட்டியை மாவட்ட கிளியாந்தட்டு கழகத்தோடு இணைந்து கொற்றிகோடு லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஜே சி ஐ நாகர்கோவில் கிங் மூலம் நடத்த பட்டது. 

குமரி மாவட்டத்தில்   பல்வேறு இடங்களில் இருந்து 8  அணிகள்  பங்கேற்றன. ஒவ்வெரு அணியும் மிக சிறப்பாக விளையாடியது. இந்த போட்டியில் மிக சிறப்பாக விளையாடிய கொற்றிகோடு லக்கி ஸ்டார் அணி சுழற் கோப்பையை தட்டி சென்றது. இந்த விளையாட்டு போட்டியை நாகர்கோயில் பொன்ராம் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் அரிராம ஜெயம் துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்விற்கு கிளப் தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். ஜெசிஐ செயலாளர் ஷாஜி , கொற்றிகோடு லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர் லிவிங்ஸ்டன் , கணக்கர் சேம் ராஜ் மாவட்ட அட்ய பட்யா செயலாளர் ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெற்றிபெற்ற அணி வீரர்களுக்கு ஜெசிஐ மண்டல இயக்குனர் கண்ணன் அவர்கள் பரிசுகளை வழங்கினார்கள்.
பரிசு வழங்கிய போது

அழிந்து போகும் தருவாயில் இருக்கும் கிராமிய விளையாட்டுகளை கொற்றிகோட்டில் அறிமுக படுத்தி  புதுப்பித்து வருகின்ற கொற்றிகோடு லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் உறுப்பினர்களை பொதுமக்கள் பாராட்டியதோடு இந்த விளையாட்டை கண்டு கழித்து விளையாட்டு வீரர்களை ஊக்குவித்தனர்.. 

இன்னும் புகைப்படங்களை பார்க்க இங்கே அழுத்தவும்  

தெற்காசிய போட்டியில் பங்கேற்கிறது "கிளியாந்தட்டு'

தமிழகத்தில் உள்ள பழமையானவிளையாட்டுகளில் ஒன்று கிளியாந்தட்டு.இது கிளி பாரி, உப்புக்கோடு,உப்புப்பட்டி உள்ளிட்ட பல பெயர்களாலும்அழைக்கப்படுகிறது.இந்த விளையாட்டு இந்திய அளவில்சரமணி, சர்பட்டி, லோன் பட்டி, தார்யா பந்த்,சரகரி, பஞ்ச்வாடி, சிக்கா என பல்வேறு பெயர்களுடன் விளையாடப்பட்டிருக்கிறது.

கடந்த 1980களில், இந்த விளையாட்டைஇந்திய அளவில் ஒருங்கிணைத்து மேம்படுத்திய பின், தற்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. "அட்டியா பட்டியா' எனஇந்தியில் அழைக்கப்பட்டாலும் இது தமிழக கிளியாந்தட்டின் வடிவம் தான். விளையாட்டு முறை ஒன்றுதான். கிராமங்களில் மாலை வேளையில், ஓய்வு நேரத்திலும், பொழுதுபோக்கிற்காகவும் விளையாடப்பட்ட இந்த விளையாட்டால் ஓடும் திறன், விழிப்புணர்வு, மதிநுட்பம் ஆகியவை அதிகரிக்கும். மேலும், உடல் பயிற்சி, கவனம், சமயோசித புத்தியும் வளரும்.

பூடான் நாட்டில் வரும் ஜூன் மாதம் 16 முதல், 19ம் தேதி வரை நடக்க உள்ள தெற்காசிய விளையாட்டு போட்டியில், அட்டியா பட்டியா இடம் பெறுகிறது. இதில் இந்திய அணி சார்பில் 16 பேர் கொண்ட குழு இடம் பெறுகிறது. அதில், தமிழகத்தில் இருந்து சிவசுப்பிரமணியன், 21, சர்வேஸ்வரன், 18, ஆகிய இருவரும்பங்கேற்கின்றனர்.இனி, இந்த விளையாட்டை எப்படிவிளையாடுவது என, தெரிந்து கொள்ளலாம்.

எப்படி விளையாடுவது?

செவ்வக வடிவத்தில் தரையில் கோடுகள் வரையப்பட வேண்டும். அந்த செவ்வகம் நீள வாக்கில் இரண்டாக பிரிக்கப்பட வேண்டும். கிளியாந்தட்டு விளையாட்டில், செவ்வகத்தின் இரண்டு பக்கமும் நான்கு அறைகளாக பிரிக்கப்படும். அட்டியா பட்டியாவில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். கிராமங்களில் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறுவர்கள் இரு சமமான குழுக்களாக பிரிக்கப்படுவர். முதலில் ஒரு குழு விளையாட்டில் இறங்கும்.

அவர்களை கீழே இறங்க விடாமல் எதிர்க் குழு தடுத்து, தொடுவதற்கு பிரிக்கப்பட்ட கிடைமட்டக் கோடுகளில் காவல் நிற்பர். அணி தலைவரை கிளி என்று அழைப்பர். இவர் தான் குழுவில் திறமையானவராகவும், சற்று உயரமான வராகவும் சுறுசுறுப்பு உடையவராகவும்இருப்பார்.

"கிளி ரெடி' என்றபடி இவர் மேல் நோக்கி ஏறி வருவார்; அப்போது, இறங்கும் குழு, வேகமாக முதல் கோட்டை தாண்டி முதல் கட்டத்திற்குள் வந்து விடுவர். இறங்கும் குழு எப்போதும் கிளியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கிளி அவரது கை எட்டும் அளவிற்கு எதிரணியினரை "அவுட்' செய்யலாம்.

இப்படி இறங்கும் குழு முழுவதுமாக எல்லை கோடுகளை தாண்டி சென்றால், அவர்கள் பழம் என்றும், இறங்காதவர்களை காய் என்றும் கூறுவர். பழம் எடுத்தவர்கள், எதிரணியிடம் பிடிபடாமல் (அவுட்) சென்று தலைப்பக்கத்திற்கு சென்று விட்டால் ஆட்டம் ஒன்று (புள்ளி ஒன்று) மீண்டும் இறங்க வேண்டும். காய் "அவுட்டானால்' வெளியே வந்து விடவேண்டும்.

சாம்பியன் பட்டம்:
பழம், கோட்டில் இருப்பவர்களிடமோ, கிளியிடமோ "அவுட்டானால்', எதிரணி தலைப்பக்கத்தில் இருந்து இறங்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து விளையாடலாம். இதில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் யார் அதிக புள்ளிகளை எடுக்கின்றனரோ அவர்கள் வெற்றி பெற்றவர்களாவர். தற்போதைய அட்டியா பட்டியாவில் அதிக அளவில் புள்ளி பெற்ற அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்படுகிறது.

இவ்விளையாட்டு பற்றி தமிழ்நாடு "அட்டியா பட்டியா' சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில்,"ஒரு காலத்தில் கிராமங்களில் விளையாடப்பட்ட இந்த விளையாட்டு வரும் ஜூன் மாதம், பூடானில், தெற்கு ஆசிய போட்டியில் பங்கேற்கிறது. அதில், இந்திய அணி சார்பில் தமிழகத்தில் இருந்து இருவர் பங்கேற்கின்றனர்' என்றார்.

பூடானில் பங்கேற்கும் நாடுகள்: இந்தியா,கஜகஸ்தான்,பூடான், மியான்மர்,தாய்லாந்து, மலேசியா,பாகிஸ்தான்,நேபாளம்

வெற்றி பெற்றதமிழர்கள்:2011ஆனந்த்ராஜ்,2012நித்யபிரகாஷ்,2013சிவசுப்பிரமணியன்

என்ன விதிகள்?:ஒரு குழுவில் 9+3 பேர்இரண்டு குழுக்கள் பங்கேற்கும்ஒரு குழு 7 நிமிடங்கள் விளையாடலாம்முதலில் களம் இறங்கும் குழுவில் 5 பேர் இறங்குவர்எதிர் தரப்பில் 9 பேரும் இறங்குவர்

1986:நாக்பூர் - தேசிய அளவிலான போட்டி

1996:தமிழக அணி முதன் முதலாக பங்கேற்றது

201112:நாக்பூர் போட்டியில் தமிழகம் 3வது இடம்

2013:தேசிய அளவிலான தென்மண்டல போட்டிகளில், தமிழகம் 2வது இடத்தை பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றது
Friday, March 23, 2012

களியக்காவிளை அருகே லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது


களியக்காவிளையை அடுத்த அதங்கோடு காக்க தூக்கி பகுதியை சேர்ந்தவர் ராஜன்(வயது48). லாரி வைத்து மணல் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுனில் என்பவருக்கு வீடு கட்டு வதற்காக 2 லாரிகளில் மணல் கொண்டு சென்றார். வீட்டு அருகே மணலை இறக்கி கொண்டிருந்த போது விளவங்கோடு தாசில்தார் சாம்செல்வின் ஜோஸ்வா அங்கு வந்தார். அவர் ராஜனிடம் மணலை இப்போது இங்கு இறக்கி விட்டு பின்னர் கேரளாவுக்கு கடத்த பார்க்கிறாயா? என கூறி லாரிகளை பறிமுதல் செய்ய முயன்றார்.

தாசில்தார் சாம்செல்வின் ஜோஸ்வா
அதற்கு ராஜன் வீடு கட்டு வதற்காக மணல் கொண்டு வந்தததை கூறி அதற்கான ஆவணங்களை காட்டினார். அதை கண்டுகொள்ளாத தாசில்தார் சாம்செல்வின் ஜோஸ்வா 2 லாரிகளையும் பறிமுதல் செய்து குழித்துறையில் உள்ள விளவங்கோடு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்.

இதையடுத்து ராஜன் தாலுகா அலுவலகம் சென்று தமது லாரிகளை விடுவிக்கு மாறு கேட்டார். அதற்கு தாசில்தார் லாரிகளை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும், தொடர்ந்து மணல் வியாபாரம் செய்ய வேண்டும் என்றால் மாதம் ரூ.25 ஆயிரம் தர வேண்டும் என்று கூறி உள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சிய டைந்த ராஜன் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சுந்தர்ராஜனிடம் புகார் செய்தார். லஞ்சம் கேட்ட தாசில்தாரை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை ராஜனிடம் கொடுத்து தாசில்தாரிடம் கொடுக்குமாறு கூறினர்.

நேற்று மாலை 6 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த பணத்துடன் ராஜன் தாலுகா அலுவலகம் சென்று பணம் கொண்டு வந்திருப்பதாக தாசில்தாருக்கு போன் செய்தார். அவர் அருகில் உள்ள குடியிருப்புக்கு வந்து பணத்தை கொடுக்குமாறு கூறினார்.

அதன்படி ராஜன் தாசில்தார் வீட்டுக்கு சென்று லஞ்ச பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தாசில்தார் சாம்செல்வின் ஜோஸ்வாவை கையும், களவுமாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் இரவு 10 மணி வரை போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.

பின்னர் ராஜாக்கமங்கலம் வைராகுடியிருப்பில் உள்ள தாசில்தாரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இரவு 11 மணி முதல் 12 மணி வரை சோதனை நடந்தது. கைதான தாசில்தார் சாம் செல்வின்ஜோஸ்வா இன்று நாகர்கோவில் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

நன்றி  :மாலை மலர்
Monday, January 2, 2012

எல்லா ஆண்டுகளை விட வித்தியாசமாக நடை பெற்ற மகிழ்ச்சி விழா

எல்லா ஆண்டுகளை போல் இல்லாமல் கடந்த ஆண்டுகளை விட மேலும் மேலும் மெருகேறி புது பொலிவுடன் இந்த ஆண்டு கொற்றிகோடு லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆண்டு நிறைவு விழா இனிதே நடந்தேறியது. 

இந்த ஆண்டு மூன்று நாட்களாக விளையாட்டு போட்டிகள் நடந்தன கடைசி நாளில் பொதுக் கூட்டமும் பரிசு வழங்கலும் நடைபெற்றது.  30-12-2011 அன்று காலையில் துவங்கிய கைப்பந்து போட்டியானது மாலை ஐந்து மணிக்கு முடிவடைந்தது. இந்த போட்டியில் பன்னிரண்டு அணிகள் பங்கேற்றன இதில் முதல் பரிசை திருவிதாங்கோடு அணியும் இரண்டாம் பரிசை வெள்ளிகோடு அணியும் பரிசுகளை வென்றன.    31-12-2011காலை ஏழு மணிக்கு கொற்றிகோடு சி எஸ் ஐ ஆலயத்தின் முன்பு அணையா விளக்கு ஒட்டம் துவங்கியது. இந்த அணையா விளக்கு ஓட்டத்தை பத்மநாபபுரம் சட்ட மன்ற உறுப்பினர் புஷ்ப லீலா ஆல்பன் அவர்கள் துவங்கி வைத்தார்கள் இந்த ஓட்டமானது குமாரபுரம், சித்திரங்கோடு, வேர்கிளம்பி , மேக்காமண்டபம் , முட்டைகாடு வழியாக மைதானத்தை வந்து அடைந்தது. பின்னர் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது இதில் குமரி மாவட்டத்திலிருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டன. 
  1-1-2012  காலை ஏழு மணிக்கு பெருஞ்சிலம்பு முதல் கொற்றிகோடு வரையிலான மாரத்தான் ஓட்ட பந்தயம் நடைபெற்றது. அதை தொடர்ந்து 200 மீட்டர் ஓட்ட பந்தயம் , குண்டு எறிதல் , நீளம் தாண்டுதல், சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் வகுப்பு வாரியாக நடைபெற்றது. 
சிறப்பு போட்டியாக வழுக்கு மரம் ஏறுதல் போட்டி நடைபெற்றது. வழுக்கு மரம் ஏறுதல் போட்டியானது பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக இருந்தது அனைவரும் கைகளை தட்டி வீரர்களை உற்சாக படுத்தியது ரசிக்கும் விதமாக இருந்தது. 
திருமணம் ஆனவர்களுக்கும் திருமணம் ஆகாதவர்களுக்குமான  வடம் இழுத்தல் போட்டி நடைபெற்றது இரு அணிகளும் ஒருவருக்கு ஒருவர் முட்டி மோதும் விதமாக போட்டி மிகவும் திரில்லாக நடைபெற்றது கடைசியில் திருமணம் ஆனவர்கள் வெற்றி பெற்றார்கள்.   

மாலை  பொதுக்கூட்டமும் சிறுவர் சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகளும் பரிசு வழங்கலும்நடைபெற்றது. இரவு திரை இன்னிசை விருந்தோடு இனிதே முடிந்தது. விழாவில் ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டது.   

இந்த  ஆண்டின் சிறப்பு என்னவென்றால் பொதுக் கூட்டத்தின் போது எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு பொது மக்கள் வந்திருந்தார்கள். சிறுவர்கள் அதாவது நாளைய இயக்கத்தின் தூண்கள் மிகவும் சுறு சுறுப்பாக பணியாற்றினார்கள்.

பதிமூன்று ஆண்டுகள் அல்ல நூறாண்டுகளுக்கு மேலாக இந்த இயக்கம் இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் பரவலாக பேசினார்கள். சிறந்த நிர்வாகத்தை இளைஞர்களால கொடுக்க முடியும் என்பதற்கு சாட்சி தான் இந்த இயக்கம்.

   

Friday, November 18, 2011

தாகம் மனிதனுக்கு மட்டுமா எனக்கும் தான்

குடிநீர் நல்லி மனிதர்களுக்கு மட்டுமா எங்களுக்கும் தான்

கொற்றிகோடு அருகே குமாரபுரம் பகுதியில் தண்ணீர் தாகத்தை தீர்த்து கொள்ள நினைத்த கன்று குட்டி குடிநீர் நல்லியில் தாகத்தை தீர்த்து கொண்ட போது எடுத்த படம்.

படங்கள் : சுபாஷ்

Updates Via E-Mail