Thursday, May 30, 2019

Who is Nesamani - Marshal Nesamani - மார்ஷல் நேசமணி

ப்ரண்ட்ஸ்’ படத்தில் வடிவேலுவின் நேசமணி கேரக்டர் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் நிலையில், இன்னொரு நேசமணியை பற்றியும் நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

இன்று தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமாக திகழ்கிறது கன்னியாகுமரி. ஆனால் இந்த கன்னியாகுமரி தமிழகத்தோடு இணைந்தது வெறும் சாதாரணமாக நடைபெறவில்லை. அதற்கு பின் பல போராட்ட சம்பவங்களுக்கு உண்டு. தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் விளவங்கோடு வட்டத்தில் கடந்த 1895-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 12-ஆம் தேதி பிறந்தவர் நேசமணி. வழக்கறிஞரான இவர் குமரி தந்தை எனவும் மக்களால் அறியப்படுகிறார். குமரி தந்தை என நேசமணி அறியப்படுவதற்கு காரணமும் உண்டு.

இந்தியா சுதந்திரம் பெற்றபோது, கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவுடன் இணைந்திருந்தது. ஆனால், அங்குப் பெரும்பாலானோர் தமிழ் மொழி பேசுபவர்களாக இருந்தனர். இவர்கள், இம்மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைக்க விரும்பினர். அத்துடன் அங்கு தமிழக மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பான போராட்டங்கள் வெடித்த நிலையில் அதனை முன்நின்று நடத்தியவர்களின் பெரும் பங்கிற்குரியவர் நேசமணி. இதனால்தான் மார்ஷல் நேசமணி என்று அம்மாவட்ட மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். இதனையடுத்து போராட்டத்தை முன்னெடுத்த நேசமணி உள்ளிட்டோர் 1954-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்களை விடுதலை செய்யக்கோரி போராட்டமும் வெடித்தது. இதனால் ஏற்பட்ட வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் நேசமணி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர்.

அதன்பின் நடைபெற்ற பலகட்ட போராட்டங்களுக்கு பின் 1956-ஆம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து 9 தாலுகாக்கள் தமிழகத்துடன் இணைக்ப்பட்டது. இதில் செங்கோட்டை பகுதி மட்டும் நெல்லை மாவட்டத்துடன் இணைந்தது. நேசமணி உள்ளிட்டோரின் போராட்டம் காரணமாகத் தான், தமிழகத்தின் தென் எல்லையாகக் குமரிமாவட்டம் மாறியது. அரசியலில் ஈடுபட்டு எம்எல்ஏ., எம்.பி உள்ளிட்ட பதவிகளையும் வகித்த நேசமணி, தனது 72-வது வயதில் 1968-ஆம் ஆண்டு மறைந்தார்.

0 comments:

Post a Comment

Updates Via E-Mail